உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2
மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான் மரண உலகத்தை நோக்கிய பயணம் – மாண்ட துணையின் உயிரினை மீட்டுவரும் முயற்சி ஆகிய புராணப் படிமங்கள் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான முயற்சி மானுடத்திற்கு மட்டுமல்ல மானுடத்தின் மனப்பிரபஞ்சத்தில் எழுந்த அதிமானுட சக்திகளுக்கும் உரியது. பாரத புராணங்களில் சத்தியவான்-சாவித்திரி அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரியாத ஒரு மரணம் வென்ற காதல் கதை ருரு-ப்ரியம்வதா கதை. ருரு-ப்ரியம்வதா, சத்தியவான்-சாவித்திரி ஆகிய இரண்டுமே மகாபாரதத்தில் உள்ளவை. இவை இரண்டுக்கும் ஒரு வளர்ச்சி தொடர்பும் உள்ளது. மத்திய ஆசிய மத பிரக்ஞையின் தொல் ஊற்றுக்கண்ணான பாபிலோனிய புராணங்களில் (அவற்றிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று விவிலயத்திலிருந்து) மேற்குக்கு பரவிய சரித்திர முலாம் பூசப்பட்ட புராணக்கதையாடல்களில் மற்றும் கிரேக்க-ரோமானிய புராணங்களில் இந்த படிமம் உள்ளது.
இவற்றினை சிறிது விரிவாக பார்க்கலாம்.
மரணத்தை சந்தித்தல் – 1.நசிகேதன்
நமக்கு மிகவும் தெரிந்த ஒரு தொன்மக் கதை கட உபநிடதத்தில் வருகிறது. ரிஷி வாஜசிரவஸ் யாகத்தின் போது கிழட்டு பசுக்களை தானமாக கொடுக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டிய மகன் நசிகேதனிடம் வெகுண்டு அவனை யமனுக்கு தானமாக அளிப்பதாக கூறுகிறார். உபநிடதத்தின் வார்த்தைகளில்:
நசிகேதன் தந்தையிடம் சென்று, “அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை, “உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன்.” என்று கூறினார். [கட உபநிடதம் 1.1.4]
பின்னர் கலங்கும் தன் தந்தையை ஆறுதல் படுத்திவிட்டு எமனுலகு செல்கிறான் நசிகேதன். நசிகேதன் சென்ற போது எமன் அங்கு இல்லை. மூன்று நாட்கள் எமன் மாளிகையில் நசிகேதன் இருக்கிறான். மூன்று நாட்கள் மூன்று இரவுகள் அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான் யமன். முதல் வரமாக நசிகேதன் தன் தந்தை தன்னிடம் ஆத்திரம் நீங்க வேண்டுமெனக் கோருகிறார். இரண்டாவது வரமாக சொர்க்கம் செல்லும் மார்க்கத்தினை கேட்கிறார். சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் யாகத்திற்கான அக்கினி இதயக்குகையில் இருப்பதாக எம தர்மன் கூறுகிறார். அவர் சொல்கிறார்:
நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாக கேள். சொர்க்கத்தை தருவதும் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது.[கட உபநிடதம் 1.1.14]
மூன்றாவதாக மரணத்துக்குப் பின்னால் மனிதன் நிலை குறித்து நசிகேதன் வினவுகிறார். எமனோ அது தேவர்களுக்கும் ஐயப்பாடு உள்ள இரகசியம் என்றும் வேறெதை வேண்டுமென்றாலும் கேள் என்றும் கூறுகிறார். ஆனால் நசிகேதனோ தமது நிலையில் உறுதியாக நிற்கிறார். நூறாண்டு வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொன், பொருள், குதிரை, பரந்த அரசு, பூமியில் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றிடும் வரம், நல்ல தேர்கள், அழகிய பெண்கள் என அனைத்தையும் அளிப்பதாகவும் நசிகேதன் தனது நிலையிலிருந்து விலகிட வேண்டும் எனவும் எமன் கூறுகிறார். ஆனால் நசிகேதன் இந்த ஆசைக்காட்டலுக்கு கூறும் மறுமொழி அழகானது.
மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் எல்லாம் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள் ஆடல்கள் பாடல்கள் உன்னிடமே இருக்கட்டும். [கட உபநிடதம் 1.1.14]
இறுதியில் எமன் மரணமில்லா பெருவாழ்வின் இரகசியத்தை நசிகேதனுக்கு உபதேசிக்கிறார். நசிகேத மகரிஷி இந்த இரகசியத்தை உணர்ந்ததன் மூலம் மரணமில்லா பெருவாழ்வினை அடைகிறார்.
இந்த உபநிடத கதையில் பல தொன்மக் கூறுகளை காணலாம்.
மறுக்கப்படும் ஞானம்:
மனிதருக்கு கிடைக்காமல் ஞானமானது ஒளித்து வைக்கப்படுகிறது. ஞானத்தின் குறியீடான அக்னி ப்ரொமீதஸால் ஸீயஸ் தேவனிடமிருந்து எடுத்து வரப்பட்டது. விவேகத்தை அளிக்கும் கனி மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்ததாக யூத புராணம் கூறும். இங்கும் எமன் நசிகேதனிடம் மறையறிவு விலக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் மேற்கத்திய புராணங்களில் விலக்கப்பட்ட ஞானத்தை தேடி அடைந்தவர்கள் நித்திய தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இங்கோ “மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இறை நிலை அடைகின்றார் நசிகேத மகரிஷி. மட்டுமல்ல இந்த ஞான மார்க்கத்தின் மூலம் அனைத்து மானுடமும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்திட முடியும்.
ஆசை காட்டல்:
பின்னாட்களில் புராணங்கள் அனைத்திலும் தவம் செய்யும் முனிவர்களின் தவத்தை கலைத்திட தேவர்கள் அனுப்பும் தேவலோக பெண்களின் தொடக்கத்தை இங்கு காண்கிறோம். அவ்வாறே பௌத்த புராணத்தில் தவமிருக்கும் சித்தார்த்தரின் தவத்தினை கலைத்திட மாறன் முயன்றதையும் நாம் காண்கிறோம். ஏசு குறித்த புராண விவரணத்தில் அவரை சைத்தான் சோதிக்கிறான். ஏசுவுக்கு காட்டப்படும் ஆசைகள் அரசதிகாரம் சார்ந்தவை என்பதையும் புத்தருக்க்கு காட்டப்படும் ஆசைகள் புலனின்ப வகையைச் சார்ந்தவை என்பதையும் ஜோஸப்காம்பெல் குறிப்பிடுவார். ஆனால் நசிகேதனில் இருவித ஆசைகளும் காட்டப்படுவதை கவனிக்கலாம்.
மூன்று நாட்கள் மரணத்தினோடு: பின்னாளில் ஏசுவின் மரிப்பு மற்றும் உயிர்த்தெழுதல் எனும் கிறிஸ்தவ புராண சித்திகரிப்பில் இதே மூன்று நாட்கள் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் மரணம்-உயிர்த்தெழுதல் குறித்த புராணங்களை தனித்தனியாக காண்கையில் இதனை விளக்கமாக காணலாம்.
அடுத்து நாம் காண இருக்கும் புராண வீர-வீராங்கனைகள் ஞானத்தை தேடி மரணத்தை சந்திப்பவர்கள் இல்லை. மாறாக மரணத்தினை இவ்வுலக வாழ்விலேயே வெல்லத் துணிந்து மரணத்தை சந்தித்தவர்கள்.