இராமசேது குறித்து அதன் இயற்கைத்தன்மை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னரே திண்ணையில் எழுதியிருக்கிறேன். இன்றைய சூழலில் இராம சேது குறித்தும் இராமர் குறித்தும் இத்தனை சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ள சூழலில் இது குறித்து சில வார்த்தைகள்,
இராமரின் வரலாற்றுத்தன்மை; இராமருக்கோ இராமாயணத்துக்கோ வரலாற்றுத்தன்மை இல்லை என இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை பலரின் மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதால் அதனை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இது தவறு. மத நம்பிக்கையை ஒரு அறிவியல் உண்மை புண்படுத்துகிறது என்பதற்காக அறிவியல் உண்மை வெளிப்படுத்தப்படாது என்றால் அந்த மத நம்பிக்கை வாழ்வதை விட மரணிப்பதே மேல். இது நான் கூறியதல்ல. சுவாமி விவேகானந்தர் கூறியதாகும். இராமபிரானும் இந்த விதிக்கு புறம்பல்ல. உண்மையைச் சொன்னால் இராமர் வாழவே இல்லை என கருதுவது எந்த விதத்திலும் இந்துக்களின் தருமத்தை தாக்கிடாது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த ஆபிரகாமிய அடிப்படைவாத மனப்பாங்கு இந்துக்களுக்கும் இந்துஸ்தானத்தின் கருத்து சுதந்திர சூழலுக்கும் உலை வைப்பதாகும். இங்கு உண்மையான பிரச்சனை என்னவென்றால் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு பொய் சொல்லியுள்ளது என்பதுதான். ரொமிலா தப்பார் போன்ற இடதுசாரி வரலாற்றாசிரியராலேயே ‘இந்தியாவின் தலை சிறந்த அகழ்வவராய்ச்சியாளர்’ என அழைக்கப்பட்டவர் பி.பி.லால். இராமாயண மகாபாரத நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படும் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் செயல்திட்ட இயக்குநராக கள ஆராய்ச்சி செய்தவர் அவர். 1977 முதல் 1987 வரை இந்த அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. 1988 இல் இந்த ஆராய்ச்சி முடிவுகளை டாக்டர்.பி.பி.லால் இந்திய வரலாறு மற்றும் ஆராய்ச்சி கழக மாநாட்டில் வெளியிட இருந்தார். ஆனால் அதனை சிலர் தடுத்தனர். பின்னர் 1990 இல் அவர் இதனை வெளியிட்டார். அவர் மிகத்தெளிவாக கூறுகிறார்: “நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இராமாயணம் என்பது ஒருவரின் கற்பனை அல்ல. அது ஒரு வரலாற்று அடிப்படையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.” இங்கு லாலின் ஆராய்ச்சி ‘நம்பிக்கையாளருக்கு’ சங்கடத்தை ஏற்படுத்தும் விசயங்களைக் கொண்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக அவர் இராமாயணத்தை கிமு 700 இல் நிக்ழந்திருக்கலாம் என கருதுகிறார் -அதாவது மகாபாரத நிகழ்வுகளுக்கு பிறகு- ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் மதநம்பிக்கைகளையோ சித்தாந்த நிலைபாடுகளையோ நிரூபிக்கும் சித்து விளையாட்டுக்கள் அல்லவே. இந்த ஆராய்ச்சி முடிவு ஒரு விசயத்தைத் தெளிவாக்குகிறது, அதாவது இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு தனது முடிவினைத் தெரிவிக்கும் முன்னர் அந்த நிலைப்பாடு தொடர்பாக தனது அமைப்பேசெய்த ஒரே ஆராய்ச்சியின் முடிவைக் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, தனது அரசியல் எஜமானர்களுக்கு ஜால்ரா தட்டியுள்ளது.
அடுத்ததாக திருவாளர் கருணாநிதி. முதலமைச்சருக்கு மேலே கூறிய அகழ்வாராய்ச்சி உண்மை தெரியாதது அதிசயமல்ல. அட சிலப்பதிகாரம் கூடவா தெரியவில்லை? இளங்கோ அடிகள் கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுகையில் ‘அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’ என இராமரைப் பிரிந்த அயோத்தியை அல்லவா உதாரணம் காட்டுகிறார்! இராமர் சேதுவை பொறுத்தவரையில் இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு அப்பால் இந்த தேச ஒற்றுமையின் அடையாளம். இதனை மகாத்மா காந்தியே ‘இந்திய சுவராச்சியம்’ எனும் தம் நூலில் கூறியுள்ளார். மகாத்மா காந்தி கூறுகிறார்; “நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியததின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9) அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ், திமுக எனும் இனவாத பாசிச க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.